மக்கள் சந்திப்பு 1
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தால், பல அரசு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை எளிதாக சந்தித்து விட முடியும். ஆனால் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக மக்களை சந்திக்க இருக்கின்ற வாய்ப்புகள் திருமணம், துக்கம் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகள் தான்.
இது சிறு கிராமங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் நகரப் பகுதிகளுக்கு சற்று சிரமம். எனவே லப்பைக்குடிக்காடு பேரூராட்சி மக்களை சந்திப்பதற்கு " மக்கள் சந்திப்பு " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பொதுமக்களை சந்தித்தேன்.
லப்பைக்குடிக்காடு இஸ்லாமியப் பெருமக்கள் மிகப்பெரும் அளவில் வாழுகின்ற ஊர். சின்ன துபாய் என சொல்லலாம். அந்த அளவிற்கு இங்கிருந்து அரபு நாடுகளில் பணிபுரிவோர் அதிகம்.
எனது அழைப்பை கடிதமாக எழுதி பெரும்பாலோருக்கு கிடைக்க செய்து, சனிக்கிழமை(22.092012) மாலை சந்தித்தேன். பொதுமக்களும், பள்ளிவாசல்களின் தலைவர்களும் வந்திருந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த கழக ஆட்சியில், அண்ணன் ஆ.ராசா அவர்கள் பரிந்துரைப்படி, தளபதி அவர்கள் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்க நிதி ஒதுக்கி தந்தார். கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்க,பக்கத்து ஊர் மக்கள் எதிர்ப்பால் தாமதமாகிவிட்டது. இது குறித்து தற்போது சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன்.இது குறித்தும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் கருத்துகள் கேட்டேன்.
பெரும்பாலானோர் வைத்தக் கோரிக்கை, ஊரை ஒட்டி ஓடுகின்ற வெள்ளாற்றின் கரையில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பதாக இருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு ஜமாத்தினரின் முதல் கோரிக்கையும் இதுதான்.
நிகழ்ச்சியிலேயே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக தடுப்புசுவர் கட்டப்படும் என்ற உறுதியை அளித்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி, மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு.
இளைஞர்களுக்கு இறகுப்பந்து மைதானம் அமைக்கவும், மற்ற அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்யவும் சில கோரிக்கைகள். படிப்படியாக நிறைவேற்றவும், மருத்துவமனை மற்றும் பள்ளியின் குறைபாடுகளை உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவும் உறுதி அளித்தேன். செய்யக் கூடியவைகளை மட்டுமே...
# இது தலைவர் கலைஞரின் சிந்தனையில் விளைந்த மனுநீதி நாள் முகாமின் மறு பதிப்புதான்...